சென்னை: தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் அதிமுக-பாஜகூட்டணியை 3வது முறையும் தமிழக மக்கள் தோற்கடிப்பார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அளித்த பேட்டி: தொகுதி மறுவரையறையை ஏன் எதிர்க்கிறீர்கள்? சிறு திருத்தம். தொகுதி மறுசீரமைப்பைத் தி.மு.க எதிர்க்கவில்லை. எதிர்வரவுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பைத்தான் உறுதியாக எதிர்க்கிறோம்.
மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது நாட்டின் பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வு, வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. நாட்டு நலனில் அக்கறை உள்ள மாநிலமாகத் தமிழ்நாடும் தென்மாநிலங்களும் இருந்த காரணத்தால் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம். மக்கள்தொகைப் பெருக்கம் என்ற நெருக்கடியை, மனிதவள ஆற்றல் என்ற சாதகமான அம்சமாக மாற்றியதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது.
நாட்டின் நலனுக்காக ஒன்றிய அரசு முன்வைத்த ஒரு திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தண்டனையாக, அதே மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பது என்ன நியாயம்? இந்த அளவுகோலைத்தான் எதிர்க்கிறோம். தொகுதி மறுவரையறை மசோதா சட்டமாவதை தடுப்பதற்கான போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை திமுக கொண்டிருக்கிறதா?
இரண்டே இரண்டு எம்.பி.க்களைக் கொண்டிருந்த தி.மு.க.தான், இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக நீடிக்கும் என்ற உறுதிமொழியை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவிடமிருந்து பெற்றது. மாநிலங்களவையில் ஒற்றை எம்.பி.யாக இருந்த எங்கள் இயக்கத்தின் நிறுவனர் அண்ணா, நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று அடையாளப்படுத்திக்கொண்டு, இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளுக்காகவும், அந்தந்த மாநிலங்களின் உரிமைக்காகவும் முழங்கினார். பண்பட்ட ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றக்கூடிய அரசாங்கமும் அன்றைக்கு இருந்தது.
தற்போது நியாயத்தைப் பெறுவதற்கு தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. அந்த வகையில், மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நேரடியாகப் பாதிக்கப்படாத மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் எம்.பி.க்களும்கூட, மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது என்பது மாநில உரிமைகளுக்கு- மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு விடுக்கப்படும் சவால் என்பதை உணர்ந்து, இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.
அதற்கேற்ற ஒருங்கிணைப்பு முயற்சிகளை திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளின் எம்.பி.க்கள் மேற்கொள்வார்கள். தொகுதி மறுவரையறை என்பது அரசியலமைப்பு சட்டம் விதித்திருக்கும் கடமை. அதை சட்டப்பூர்வமாக தடுக்க முடியும் என நம்புகிறீர்களா? நாங்கள் அதைத் தடுக்கவில்லை. நியாயமான காரணங்களை முன்வைத்து, அதனைத் தள்ளி வைக்கக் கோருகிறோம். ஏற்கெனவே இரண்டு சட்டத்திருத்தங்களுடன் தள்ளிவைக்கப்பட்டதை, மீண்டும் ஒருமுறை அதே வழியில் தள்ளிவைத்து, காலவரையறையை சரியாக செயல்படுத்தி, சமநியாயம் கொண்ட தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்குத் துணைநிற்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை வஞ்சிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம். உங்களது போராட்டத்தை வலுப்பெறச் செய்வதற்காக பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களை ஒன்றிணைக்கும் முயற்சியை மேற்கொண்டீர்கள். அவர்களின் பதில்கள் உங்களுக்கு நிறைவாக இருந்ததா? திமுக எப்போதுமே மாநில உரிமைகளுக்கான குரலையும், சமூகநீதிக்கான முழக்கத்தையும், மொழி சமத்துவத்தையும் முன்னெடுக்கிற இயக்கம்.
அண்ணா காலத்திலும், கலைஞர் காலத்திலும் இத்தகைய முயற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவர்களின் வழியில்தான், தொகுதி மறுவரையறை செய்யப்படுவதில் உள்ள அநியாயத்தை முன்னிறுத்தி, திமுக முதல் குரல் கொடுத்தது. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசின் சார்பில் நடத்தி, பிரதான எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் முழுமையான ஆதரவைப் பெற்றோம்.
அதன் தொடர்ச்சியாக கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் மார்ச் 22 அன்று சென்னையில் கூட்டப்பட்டு 3 முதலமைச்சர்கள், 2 துணை முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர் உள்பட 8 மாநிலங்களின் பங்கேற்புடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நன்றி. இது முதல் கட்ட வெற்றி. போராட்டம் தொடரும். தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை எப்போது சந்திக்க இருக்கிறார்கள்? பிரதமரிடம் இருந்து ஒரு நல்ல பதில் வரும் என எதிர்பார்க்கிறீர்களா? பிரதமர் அவர்களிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறாம். அவரும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை உணர்ந்தே இருப்பார். அதனால், அவரது அழைப்பை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கிறோம். 1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என நீங்கள் கோருவது தமிழ்நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளை பற்றி பேசாமல் மக்களை திசைதிருப்பவே என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதற்கு தங்களின் பதில் என்ன? திமுகவின் மாநில உரிமைக் குரலுக்கு நியாயமான பதில் சொல்ல முடியாதவர்கள்தான் திசை திருப்புகிறார்கள். ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள், அறிக்கைகளின் படியே தமிழ்நாடு பல்வேறு இலக்குகளில் முன்னேறியிருக்கிறது.
திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. மக்களின் ஆதரவு திமுகவுக்கு வலுவாக உள்ளது. எனவே, திசை திருப்ப வேண்டிய சூழலோ அவசியமோ எங்களுக்கு கிடையாது. 1971 மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கெனவே இந்திய அளவில் விவாதிக்கப்பட்டதுதான். அது மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொடரவேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம். தொகுதி மறுவரையறையை நடைமுறைபடுத்துவது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் இறுதி முடிவை தொகுதி மறுவரையறை ஆணையமே எடுக்கும் என மோடி அரசு சொல்வதை பற்றி உங்கள் கருத்து?
அதை பிரதமர் நாடாளுமன்றத்திலோ, நாட்டு மக்களுக்கோ ஏன் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் இது பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமரிடம் கேட்டும்- இதுவரை ஏன் பிரதமர் தெளிவுபடுத்தி மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு பாதிப்பு வராது என்ற உறுதிமொழியை ஏன் அளிக்கவில்லை? பாஜ அரசு சொல்வதும் செய்வதும் முற்றிலும் மாறுபாடாக உள்ளது என்பதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உண்டு.
வக்பு வாரிய திருத்தச் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் உறுப்பினர்கள், குறிப்பாக திமுகவின் சார்பில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்வைத்த வாதங்கள், கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, பாஜ விரும்பியபடி அந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியாயமற்ற அரசாக பாஜ செயல்படுவதால்தான் தொகுதி மறுசீரமைப்பு குறித்த அதன் தெளிவற்ற விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லை.
பாஜக-அதிமுக கூட்டணியை வலிமையான எதிரியாக பார்க்கிறீர்களா? அவர்கள் ஒன்று சேர்ந்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? இது திமுக அணியால் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்ட கூட்டணிதான்! ஒரு முறை அல்ல; இரு முறை! 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே இரு கட்சிகளும் பிரிந்தது போலத் தெரிந்தாலும் கள்ளக்கூட்டணியாகத்தான் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டினேன். அதை வெளிப்படுத்தும் வகையில்தான் அண்மைக்கால நிகழ்வுகள் இருந்தன. தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்யும் பா.ஜ.வையும், அதனுடன் கூட்டணி சேர்ந்து துரோகம் இழைக்கும் அதிமுகவையும், மூன்றாவது முறையும் தமிழ்நாட்டு மக்கள் தோற்கடிப்பார்கள்.
உங்கள் அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நலத் திட்டங்களின் பயனாளிகளாக இருக்கும் மக்கள் இந்த அரசை போற்றுகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் சீரழிந்து கிடந்த நிர்வாகம் இப்போது சீரடைந்து இருக்கிறது. சட்டம்- ஒழுங்கில் காவல்துறை தலைநிமிர்ந்து செயலாற்றுகிறது.
தொழில் முதலீடுகள், புதிய வேலை வாய்ப்புகள், மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி என முன்னனி மாநிலமாக நிற்கிறது. இவற்றை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், இந்த அரசின் மீது எவ்வித குற்றச்சாட்டையும் கூற முடியாத எதிர்க்கட்சிகள், கற்பனை குற்றச்சாட்டுகளைக் கூறி விதண்டவாத அரசியலும் – வீண் பிரச்சாரமும் செய்கிறார்கள். உண்மை நிலை என்ன என்பது மக்களுக்கு தெரியும். மதுவிலக்கு கொள்கை உட்பட்ட பல விசயங்களில் உங்கள் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உங்கள் மீது வைக்கும் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?
தோழமைக் கட்சியினரின் ஆலோசனைகள் மட்டுமின்றி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் கேட்டு, அவர்களின் ஒத்துழைப்புடன்தான் இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தோழமைக் கட்சியினரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை நான் எப்போதும் மதிக்கிறேன். மார்ச் 31, 2026 நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ.9.29 லட்சம் கோடியாக இருக்கும் என்று உங்கள் அரசு ஒப்புக்கொள்கிறது. அதை எப்படி சரி செய்ய போகிறீர்கள்?
தமிழ்நாட்டை கடனில் மூழ்கடித்து விட்டு காலி கஜானாவை விட்டு சென்ற ஆட்சி, அதிமுக ஆட்சி. அதன்பிறகு நிதி நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து திறம்பட்ட நிதி மேலாண்மை மூலம் நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்புக்குள் உள்ள மாநிலம், தமிழ்நாடு. நாங்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோது கொரோனா பேரிடரின் இரண்டாவது அலையின் கடுமையான தாக்கம், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாதாளத்தில் சரிந்து கிடந்த பொருளாதாரம், தொழில்துறை முடக்கம் என்றிருந்த நிலையை மாற்றி தற்போது 10 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுடன் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு, பொருளாதாரச் சூழல் முன்னேற்றம் அடைந்துள்ளது.
முதலீட்டாளர்களின் முதல் முகவரி என்பது தமிழ்நாட்டின் அடையாளமாகியுள்ளது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்குடன் முன்னேறுகிறோம். பட்ஜெட்டில் வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்திருக்கிறோம். மூலதன முதலீட்டை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். எனவே, வரம்புக்குட்பட்ட கடன் என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான உரம். தேவைப்படும் அளவிற்கு கவனமாக பொறுப்புடன் அதனைப் பெற்று மாநில முன்னேற்றத்திற்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.
தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளது போல் தெரிகிறது. உங்கள் பதில்? இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களின் நிலையையும் நீங்கள் அறிவீர்கள். நாடு முழுவதும் கவலையளிக்கக்கூடிய ஒன்றை, தமிழ்நாட்டிற்குரியதாக சுருக்கிப் பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது. அதிமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறினார்கள். முக்கிய அதிகாரிகள் சிலரும், அதிமுக அமைச்சர்களுமே குற்றச்சாட்டிற்கு உள்ளானதை பார்த்திருப்பீர்கள்.
ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு – போதைப் பொருட்களை ஒழிக்க – முதலமைச்சர் தலைமையிலே ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். இதற்கென பிரத்யேகமாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தினோம். வரலாறு காணாத விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். போதைப்பொருள் விற்போரின் வங்கி கணக்குகளை முடக்குவது, கடைகளை சீல் வைப்பது, அதிகப்பட்ச சிறை தண்டனை பெற்றுத்தருவது என திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ளது போன்ற தீவிர நடவடிக்கைகளை 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எடுத்தது உண்டா?
குட்கா போன்ற போதை வஸ்துகள் கடந்தகால ஆட்சியில் எந்தளவுக்குப் புழங்கின என்பதும், அன்றைய அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் வரை அதில் தொடர்புடையவர்களாக இருந்ததையும் தமிழ்நாடு அறியும். தற்போது வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் நார்கோடிக் வகைகள், இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து துறைமுகங்கள் வாயிலாக உள்ளே நுழைந்து, இந்தியாவின் அனைத்து திசைகளிலும் உள்ள மாநிலங்களுக்குள் ஊடுருவுகிறது என்பதை உங்களைப் போன்ற பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. நுழைவாயிலின் காவல் ஒன்றிய அரசிடம்தான் உள்ளது.
பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணையில் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து உச்ச நீதிமன்றம் கடுமையான கருத்தை முன்வைத்துள்ளது, மேலும் இந்த விவகாரம் குறித்த நீதிமன்றத்தின் கேள்விக்கு அவர் பதிலளிக்காதது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. அரசின் நடவடிக்கை சரியானது என நினைக்கிறீகளா? வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இக்கேள்விக்கு கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது.
சிந்து சமவெளி நாகரிக அகழ்வாய்வு இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளைப் புரிந்துகொள்வதற்காக ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று ஜனவரி மாதம் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டீர்கள். இதுவரை அதற்கு நம்பகமான பதில் ஏதேனும் வந்துள்ளதா? இது திராவிட-ஆரியப் போரின் தொடர்ச்சியாக பார்க்கலாமா? 3000 ஆண்டுகள் பழமையான சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருதுகோளை வெளியிட்டவர் பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறைத் தலைவரான சர் ஜான் மார்ஷல்.
அந்த ஆய்வு முடிவுகள் வெளியான நூற்றாண்டில், சிந்துவெளி அகழாய்வில் கிடைத்த எழுத்து வடிவங்களை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகை என அறிவிக்கப்பட்டது. இது ஆரிய-திராவிட போராட்டத்தின் நீட்சியல்ல. ஆரியத்துக்கு முந்தைய இந்த மண்ணின் பண்பாடான திராவிடத்தை ஆய்வுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் நிலைநாட்டும் முயற்சி. எழுத்து வடிவம் குறித்த வெற்றிகரமான முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். துணை முதல்வராக உங்கள் மகன் உதயநிதியின் செயல்திறனை எப்படி மதிப்பிடுவீர்கள்?
துணை முதலமைச்சர் எனக்கும் துணையாக இருந்து பணியாற்றுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கும் துணையாக இருந்து திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறார். நீட் எதிர்ப்பு மசோதாவை குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்ததை ஒரு சர்வாதிகார செயல் என்றும் கூட்டுறவு கூட்டாட்சி வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் என்றும் நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆனால் நீட் முன்மொழியப்பட்டபோது திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருக்கவில்லையா?
தி.மு.க பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வைப் பரிந்துரைத்தபோதே அதனை எதிர்த்து வழக்கு தொடுத்தவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை ஏற்கவில்லை. மாநிலங்களின் விருப்ப உரிமையாக அது அமைந்தது. தி.மு.க தொடர்ந்த வழக்கிலும் சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலேயே “நீட் தேர்வு செல்லாது” என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளிவந்து விட்டது. திமுக ஆட்சியில் இருந்த காலம்வரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஏன், அம்மையார் ஜெயலலிதா இருந்தவரைகூட நீட் தேர்வு நடக்கவில்லை. “நீட் தேர்வு செல்லாது” என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு பாஜ ஆட்சிக்காலத்தில்தான் திரும்ப பெறப்பட்டது. பாஜவிடம் தங்களை அடகுவைத்துவிட்ட அதிமுக தலைவர்கள், பதவியில் நீடிப்பதற்காக- பாஜ விருப்பப்படி தமிழ்நாட்டில் நீட் தேர்வைத் திணித்தார்கள்.
பாமக உங்கள் பக்கம் வந்து, விசிக அதிமுக பக்கம் சேன்றுவிடக்கூடும் என்றும், அதனால் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் ஏற்படக்கூடும் என்றும் சில கிசுகிசுக்கள் உள்ளன. இது உண்மையா? நீங்களே முணுமுணுப்புகள் என்று சொல்லி விட்டீர்கள். புறந்தள்ளுங்கள். திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. தோழமைக் கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன.
* ‘பச்சையான பா.ஜ.க.காரர் ஆர்.என்.ரவி’
ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்று நீங்கள் இன்னும் வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு, “அவருக்குரிய பதவிக்காலம் முடிந்தபிறகும் தமிழ்நாட்டில்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தமிழுக்கு எதிராகவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எதிராகவும், தமிழ்நாடு என்ற பெயருக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர், பச்சையான பா.ஜ.க.காரராகவே வெளிப்படுத்திக்கொள்கிறார்.
அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்களால் வெறுக்கப்படுவதால், அவர் பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை இன்னும் அதிகமாக மேற்கொண்டு, திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்வார்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
* ‘இருமொழிக்கொள்கையே தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணம்…’
மும்மொழிக் கொள்கை தமிழ்நாட்டுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் இன்னொரு சர்ச்சைக்குரிய விசயமாக இருந்து வருகிறது. இந்தி திணிப்பு பற்றிய உங்களது பயம் அதீதமா அல்லது உண்மையா என்று கேட்டதற்கு, ‘‘ இந்திமொழி ஆதிக்கம் என்பது எத்தகைய மோசமான விளைவுகளை உருவாக்கும் என்பதற்கும், இந்தித் திணிப்பினால் வடமாநிலங்களிலேயே பலர் அவரவர் தாய்மொழிகளையும், வட்டார மொழிகளையும் கடந்த ஐம்பதாண்டுகளில் இழந்திருப்பதையும் ஆதாரத்துடன் முன்வைத்திருக்கிறோம்.
தமிழ்நாடு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்த விழிப்புணர்வுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றது. அதில் திராவிட இயக்கத்தின் பங்கு முக்கியமானது. திமுக ஆதரவு மாணவர்கள், இளைஞர்கள், தொண்டர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். திமுக தலைவர்கள் கொடுமையான சிறைத் தண்டனையை எதிர்கொண்டனர்.
பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அதுதான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி – பண்பாட்டின் பாதுகாப்பிற்கும் அடித்தளமாக உள்ளது. மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு உறுதியுடன் எதிர்ப்பதற்கு காரணம், அது தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிதைக்கும் நோக்கிலான பாஜஅரசின் மறைமுகத் திட்டம் என்பதால்தான்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
* கவர்னர் தபால்காரர்தான்
ஆளுநர்ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானபோது சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பேரவையிலேயே அந்தத் தீர்ப்பு பற்றி பெருமிதத்துடன் தெரிவித்தேன். ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் சட்டமியற்றும் அதிகாரம் மிக்கது.
நியமனப் பதவியான ஆளுநர் பதவி என்பது ஒரு கவுரவப் பதவிதான். சட்டமன்றத்தின் அதிகாரத்தை முடக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பின் வாயிலாக தெளிவுபடுத்தி, மத்திய – மாநில உறவுகளில் அதற்குரிய அதிகாரம், ஒரு தபால்காரருக்குரியதுதான் என்பதைத் தொடர்ந்து தி.மு.க சொல்லி வருகிறது. அது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
* எது பிரிவினைவாதம், எது வெறுப்பரசியல்?
அரசியல்சட்டம் தந்த கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்க குரல் கொடுப்பதும், அரசியல் சட்ட அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட மொழிகளை வளர்க்கப் பாடுபடுவதும் எப்படி பிரிவினை அரசியலாக இருக்க முடியும்? வெறுப்பையே அரசியல் கொள்கையாகக் கொண்ட பா.ஜ., உருவாக்கிய மதக் கலவரங்கள், இனக்கலவரங்கள் இன்னமும் இந்திய வரலாற்றின் கறை படிந்த பக்கங்களாக உள்ளன.
மணிப்பூர் மாநிலம் இப்போதும் கலவரத்தின் பச்சை ரத்தம் காயாத பூமியாக உள்ளது. நாடு போர்க்களத்தில் நின்ற ஒவ்வொரு நேரத்திலும் துணை நின்று – அதிக அளவில் நிதி தந்து இந்த நாட்டிற்கு உற்ற துணையாக இருந்த தமிழ்நாட்டைப் பார்த்து – திமுகவைப் பார்த்து பாஜவினர் குற்றம்சாட்டுவது, மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போலத்தான் இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
The post தமிழ்நாட்டை வஞ்சிக்கும் அதிமுக – பாஜ கூட்டணி 3வது முறையும் தோல்வி அடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.