தருமபுரி: தருமபுரி நகரில் அடுத்தடுத்த இரண்டு துணிக் கடைகளின் மேற்கூரையை உடைத்து, ரூ.6.90 இலட்சம் பணம் கொள்ளை அடித்த முகமூடி கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.6.90 இலட்சம் பணம், சொகுசு கார் மற்றும் மேற்கூரைகளை உடைக்க பயன்படுத்திய கம்பிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி பேருந்து நிலையம் அருகில் உள்ள 2 பிரபல துணிக்கடைகளில் கடந்த 3-ம் தேதி இரவு மேற்குரையை உடைத்து மர்ம நபர் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளார். இதில் ஒரு கடையில் ரூ.6 இலட்சம் மற்றொரு கடையில் 1.95 லட்சம் என மொத்தம் 6.90 லட்சம் பணம் கொள்ளை அடிக்க பட்டது.
இந்த நிலையில் 4-தேதி காலை வழக்கம் போல் கடையை திறந்த உரிமையாளர்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அறிந்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் காவல் துறையினர் கடைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இன்று காலை தருமபுரி நெசவாளர் காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் முகமூடி அணிந்து கொண்டு சுற்றித்திரிந்த இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார் தொடர்ந்து அவரை விசாரித்ததில் பெங்களூர் பகுதியைச் சார்ந்த ஆனந்த்(37) என்பது தெரியவந்தது. மேலும் இரண்டு கடைகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளில் இருப்பது ஆனந்த் என்பதை காவல் துறையினர் உறுதி செய்தனர். மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வேலூர், சேலம்,போன்ற பகுதிகளில் முகமூடி அணிந்து கொண்டு கடைகளின் மேற்கூறையை உடைத்து பணம் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து ஆனந்தை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து மேற்கூரைகளை உடைக்க பயன்படுத்திய கம்பிகள், அதிநவீன உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இரண்டு கடைகளில் கொள்ளையடித்த 6.90 லட்சம் பணம், சொகுசு கார் ஒன்றை பறிமுதல் செய்தனர். மேலும் ஆனந்த் மீது பல்வேறு காவல் நிலையத்தில் 40 திருட்டு வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post தருமபுரி நகரில் அடுத்தடுத்த இரண்டு துணிக் கடைகளின் மேற்கூரையை உடைத்து கொள்ளை: கொள்ளையன் கைது! appeared first on Dinakaran.