‘இந்தியாவிலேயே ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது’ என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை, அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முழுவதும் பட்டிதொட்டிகளில் எல்லாம் பகுத்தறிவு கொள்கையை பெரியார் பரப்பினார். நாட்டில் உள்ள மத, சாதி வெறி சக்திகளுக்கு சவாலாக, சமாதி கட்டிய நபராக திகழ்ந்தவர் பெரியார். சாதிய ஆதிக்கத்துக்கு எதிராக தனது வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்தியவர். பகுத்தறிவு சிந்தனையை பரப்பி பெண்ணடிமை கூடாது என வலியுறுத்தினார்.