புதுச்சேரி, விழுப்புரம் மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்தையும் ஃபெஞ்சல் புயல் புரட்டி போட்டது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சனிக்கிழமை பிற்பகல் வரை மிதமான மழை பெய்து வந்த நிலையில், புதுச்சேரி அருகே ஃபெஞ்சல் புயல் கரையை நெருங்கியபோது, மழை கொட்டத் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் மழையின் தாக்கம் தீவிரமானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையிலிருந்து வழிந்தோடும் தண்ணீரால், திருவண்ணாமலை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பே கோபுரம் தெரு, சின்னக்கடை தெரு, போளூர் சாலை, வேலூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.