*மாநகராட்சியில் தீர்மானம்
திருச்சி திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகளை தமிழ்நாடு முதல்வர் கடந்த 30.12.2021 அன்று அடிக்கல் நாட்டி திட்டத்தை துவக்கி வைத்தார். இப்பணிகள் அமைச்சர் கே.என்.நேரு, மாநகர மேயர் அன்பழகன், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சரவணன் ஆகியோரின் மேற்பார்வையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது இப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஓரிரு மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதிய பஸ் முனையம் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் பழைய மத்திய பஸ் நிலையம் வணிக வளாகமாக மாற்றப்படவுள்ளது என்பன உட்பட பல்வேறு யூகத்திலான கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரவி வந்தது. ஆனால் அவ்வாறு எந்த திட்டமும் மாநகராட்சி வசம் இல்லை.
பழைய மத்திய பஸ் நிலையம் தொடர்ந்து பஸ் நிலையமாகவே இயங்கும் என மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் சத்திரம் பஸ் நிலையம் மற்றும் மத்திய பஸ் நிலையம் என இரண்டு பஸ் நிலையங்கள் இன்றுவரை செயல்பட்டு வருகிறது.
இதில் மத்திய பஸ் நிலையமானது 1972ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் தற்போது வரை உள்ளது. இந்த பஸ் நிலையம் மொத்தம் 26 ஆயிரத்து 675 ச.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள போதும், தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகை பெருக்கம், பஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நெரிசலில் சிக்கித்தவிக்கிறது. தற்போது மத்திய பஸ் நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு 730 நகர பஸ்களும், 2 ஆயிரத்து 395 வெளியூர் பஸ்களும் என மொத்தம் 3,125 பஸ்கள் வந்து செல்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் பஸ் நிலையம் வரும் பயணிகள் எண்ணிக்கை மற்றும் பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது, இவ்வளவு பயணிகளையும், பஸ்களையும் கையாள்வதற்குரிய போதிய கட்டுமான வசதிகளை மேற்கொள்ள இயலாததும் முக்கிய காரணமாக உள்ளது. இந்த பஸ் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருவதுடன், திருச்சி மக்களின் முக்கிய அடையாளமாகவும் மனதில் நின்று வருகிறது. எனவே இது பாதுகாக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது.
எனவே, 50 ஆண்டுகளாக மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வந்துள்ள மத்திய பஸ் நிலையத்தை தொடர்ந்து பஸ் நிலையமாகவே இயக்குவதற்கு உண்டான முயற்சிகளை மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இங்கு காலத்துக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள், வசதிகள் செய்யப்பட்டு வந்த போதும், மேலும் பல்வேறு மாற்றங்கள், வசதிகளுக்காக இந்த பஸ் நிலையம் தற்போதும் காத்திருக்கிறது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, திருச்சி மத்திய பஸ் நிலையம் திருச்சி மக்களின் முக்கிய அடையாளமாக பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. எனவே கால மாற்றத்துக்கு ஏற்ப பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் அத்தியாவசியத்தை கவனத்தில் கொண்டுள்ள மாநகராட்சி நிர்வாகம், அதற்கான பணிகளை தற்போது துவங்கியுள்ளது. இதற்காக, திட்டப்பணிகள் மேம்பாட்டு மானிய நிதியின் கீழ் (Project Development Grant Fund) மத்திய பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டியுள்ளது.
பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் மத்திய பஸ் நிலையத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யும் பணி மற்றும் பரிவர்த்தனை, ஆலோசனை, சேவைகள் வழங்கும் பணியை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம், (TUNIFSL) சென்னை மூலம் கடந்த ஜன.8ம் தேதியன்று ஒப்பந்தப்புள்ளி (RFP) அறிவிப்பு கோரப்பட்டுள்ளது.
எனவே திட்டப்பணிகள் மேம்பாட்டு மானிய நிதியின் கீழ் மத்திய பஸ் நிலையத்தை மேம்படுத்துவதற்கு, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே விரைவில் இதற்கான பணிகள் துவங்கும். தொடர்ந்து புதுப்பொழிவுடன் திருச்சி மத்திய பஸ் நிலையம் மக்கள் சேவையாற்றும் என்றனர்.
The post திட்டப்பணிகள் மேம்பாட்டு மானிய நிதியின் கீழ் மேம்படுத்தப்பட்டு மத்திய பேருந்து நிலையம் துப்பொலிவுடன் இயங்கும் appeared first on Dinakaran.