தேர்தலுக்கு தேர்தல் திண்டுக்கல் மக்கள் தோல்வியையே பரிசாக தந்தாலும் தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலான திண்டுக்கல் மாவட்டத்தில் எப்படியாவது வெற்றிக்கொடி நாட்டி தனது ஆளுகை எல்லையை விரிவுபடுத்த விடாமுயற்சியுடன் போராடும் பாமக, இம்முறையும் அதற்கான திட்டத்துடன் இருக்கிறது.
வட மாவட்டங்களுக்குள் சுருங்கிவிட்ட கட்சி என்ற இமேஜை உடைத்து தென் மாவட்டங்களிலும் தடம் பதிக்க நீண்ட நாட்களாகவே போராடி வருகிறது பாமக. அதற்காவே மாநில பொருளாளர் பதவியை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திலகபாமாவுக்குக் கொடுத்தது. இந்து வன்னியர்களும் கிறிஸ்தவ வன்னியர்களும் பரவலாக வசிக்கும் திண்டுக்கல் பகுதி தான் பாமக-வின் குறி.