மதுரை: மதுரையில் திமுக நடத்திய பிரமாண்ட பொதுக்குழுவுக்குப் போட்டியாக மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ல் நடத்துகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் திமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 1-ல் நடைபெற்றது. 20 ஏக்கர் பரப்பில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கில் பிரமாண்டமாக நடத்தப்பட்ட பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களில் பெரும்பாலானவை மத்திய பாஜக அரசுக்கு எதிரானது ஆகும். மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம், உச்ச நீதிமன்றத்தோடு மோதும் பாஜக அரசுக்குக் கண்டனம், வஞ்சக பாஜகவையும் துரோக அதிமுகவையும் விரட்டியடித்து 2026-ல் திமுக ஆட்சி தொடர களப்பணியாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.