சென்னை: திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு நேற்று சென்னை, பெரியார் திடலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு கணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை திறந்து வைத்தார்.
இவ்விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், ஆ.ராசா எம்பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், பெருங்கவிக்கோ வா.வு.சேதுராமன், தி.க. துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தி.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘பெரியார் கைத்தடி’ போன்ற நினைவு பரிசை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: என்ன பேசுவது என்று புரியாமல் நான் விழித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் நம்முடைய ஆசிரியர் கி.வீரமணி எனக்கு அளித்திருக்கக் கூடிய அந்த பரிசை வாங்குகின்றபோது என்னையே நான் மறந்திருக்கிறேன். வாழ்க்கையில் எத்தனையோ பேர் பரிசுகளை நாம் பெற்றிருக்கலாம், வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தப் பரிசுக்கு எதுவும் ஈடாகாது என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். போதும், எனக்கு இது போதும். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும். தாய் வீட்டிற்கு வந்திருக்கிறேன். தாய் வீட்டிற்கு வருகிறபோதெல்லாம் நான் உணர்ச்சியை, எழுச்சியை தொடர்ந்து பெறுவதுண்டு.
ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை உணர்வு பெற்று மேலெழுந்து நிற்கவும், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு, பல்வேறு தியாகங்களைப் புரிந்து நம்முடைய இனத்திற்காக அயராது உழைத்திருக்கக் கூடிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் பெரியார் மறைந்த இந்த நாளில், அவருடைய கருத்துகளை, அவருடைய எண்ணங்களை, அவருடைய போராட்டங்களை, அவருடைய தியாகங்களை, அவருடைய வாழ்க்கை வரலாற்றை நம்முடைய இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லக் கூடிய வகையில் “டிஜிட்டல் நூலகமாக, ஆய்வு மையமாக” இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
பெரியார் வாழ்ந்த காலத்தில், அவர் பேசிய முற்போக்குக் கருத்துகளுக்காக, மானுட சமுதாயத்தின் விடுதலைக்கான கருத்துகளுக்காக பழமைவாதிகளிடமும், பிற்போக்குவாதிகளிடமும் கடுமையான எதிர்ப்பை அவர் சந்தித்தார். இந்த மண்ணுலகில் வாழக்கூடிய அத்தனை பேரின் மனங்களிலும் அவர் நுழைந்திருக்கிறார் அதுதான் பெரியார்.
பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும், இன்றைக்கு அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம், அவரைப் பற்றி புகழ்ந்து கொண்டிருக்கிறோம், அவருடைய வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவரை இன்றைக்கு நினைவுபடுத்தி அந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுதான் பெரியாரின் தனித்தன்மை. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
The post திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்: கணினி நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.