திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நிபுணர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து கடலில் பக்தர்கள் வழக்கமாக இறங்கும் பகுதியில் கடல் அரிப்பு அதிகமாகி சுமார் 7 அடி வரையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் சுமார் 300 மீட்டர் தொலைவை கடந்துதான் பக்தர்கள் பெரும் சிரமத்துடன் நீராடி வருகின்றனர்.
கடற்கரை அளவும் குறுகி வருவது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே கடல் அரிப்பு குறித்து முறையான ஆய்வு செய்து கடற்கரை மற்றும் கோயிலை காத்திட வேண்டுமென பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தூத்துக்குடி எம்பி கனிமொழி, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று காலை திருச்செந்தூர் முருகன் கோயில் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தை நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது கடற்கரையில் இறங்கி அங்கே அரிப்பினால் தெரிந்த பாறைகளையும் தொட்டு பார்த்தனர்.
பின்னர் கனிமொழி எம்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்தாண்டு நடைபெறவுள்ள கோயிலின் குடமுழுக்கிற்கு முன்பு துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் ஐஐடி வல்லுநர்களை கொண்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆலோசித்து, தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று கடல் அரிப்பை தடுப்பதற்கான நிரந்தர தீர்வை முதல்வர் அறிவிப்பார். இந்த கடற்கரையில் கரை ஒதுங்கிய சிற்பங்கள், வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களாக இருந்தால் நிச்சயமாக அவற்றை பாதுகாப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்றனர்.
The post திருச்செந்தூர் கோயிலில் அமைச்சர்கள், எம்பி ஆய்வு: கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு என தகவல் appeared first on Dinakaran.