ஆவடி: திருநின்றவூர் ஈசா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 250 கட்டிடங்களுக்கு நீர்வளத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆவடியை அடுத்து திருநின்றவூர் ஈசா ஏரி 853 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளன. பொதுப்பணித் துறையில் எடுக்கப்பட்ட விவரங்கள்படி ஈசா ஏரியில் 250 கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. தற்போது இந்த ஏரியில் 3 அம்மன் கோயில்கள், ஒரு பொதுக்கழிவறை, 3 மளிகைக் கடை மற்றும் வீடுகள் உள்பட 250 கட்டடங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீர்வளத்துறையால் படிவம் 2 வழங்கப்பட்டது.
இந்நிலையில், உதவி பொறியாளர் நீர்வளத்துறை பாசன பிரிவு 1 அதிகாரி உஷா தலைமையில், ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு படிவம் 3 நேற்று வழங்கப்பட்டுள்ளது. கொட்டாம்பேடு ஏரிக்கரை தெரு, லட்சுமிபதி நகர், திரவுபதி அம்மன் கோவில் தெரு, கன்னிகாபுரம் ரயில் நிலைய சாலை மற்றும் பெரியார் நகரில் உள்ள கட்டிடங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். அதில், கடிதம் கிடைப்பெற்ற 14 நாட்களுக்குள் தங்களின் ஆக்கிரமிப்பினை ஏன் அகற்றக்கூடாது என்பதற்கான விளக்கத்தையும், நீங்கள் ஆக்கிரமித்து வைத்துள்ள இடம் தங்களுக்கு சொந்தம் என்பதற்கான ஆதாரத்தையும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தங்கள் பதில் திருப்தி அளிக்காவிட்டால், மற்றும் பதில் பெறாவிட்டால் கூடுதல் 7 நாட்கள் கால அவகாசத்திற்கு பின் அரசு விதிகளின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் வழங்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடக்காமலிருக்க 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆவடி வட்டாட்சியர் உதயம் தலைமையில் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.
The post திருநின்றவூர் ஈசா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 250 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்: நீர்வளத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.