மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் துறை கட்டுப் பாட்டிலுள்ள குகைகளை சேதப்படுத்தியவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடுகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் சமணர் குகை மற்றும் குகை கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கான தற்காலிக பராமரிப்பு பணியாளரான ராஜன் என்பவர் குகை கோயில்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார்.
அப்போது, தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள குகைகளில் அடையாளம் தெரியாத சில சமூக விரோதிகள், பச்சை நிற பெயின்ட்டை அடித்து அந்த இடத்தை சேதப்படுத்தி இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக திருமயம் வட்ட தொல்லியல் துறை உதவி அலுவலர் சங்கரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரும் ஆய்வு மேற்கொண்டார்.