திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் இயங்குகின்றன. இதில், 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலான தொழிற்சாலைகளில் சட்டப்படியான வேலை நேரம், வார விடுமுறை உட்பட தொழிற்சாலை சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை எனவும், இஎஸ்ஐ, பிஎஃப் ஆகிய தொழிலாளர் நலச்சட்டங்களும் மீறப்படுவதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன.
இதுதொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, “தொழிற்சாலைகளில் ஓவர் டைம் வேலை என்பது 3 மாதங்களில் 75 மணிநேரம் மட்டுமே செய்யப்பட வேண்டும். அதற்கும் இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும். பனியன் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பீஸ்ரேட் மற்றும் ஒப்பந்த முறையில் பணிபுரிவோர் உட்பட அனைத்து பிரிவு தொழிலாளர்களையும் இஎஸ்ஐ, பிஎஃப் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.