தனது பதவிக்காலம் முடிய ஓராண்டு உள்ள நிலையில், நல்லாட்சி வழங்க முயல்கிறார், முதல்வர் பொப்பிலி சத்தியமூர்த்தி (ஸ்ரீகாந்த்). ஆனால், பணம், பதவி வெறிப் பிடித்த அவருடைய மகன் மோபிதேவி (எஸ்.ஜே.சூர்யா), முதல்வரைக் கொன்று அப்பதவியைக் கைப்பற்ற முயற்சிக்கிறார். ஆனால், முதல்வர் இறக்கும் முன்பே, ஐஏஎஸ் அதிகாரியான ராம் நந்தனை (ராம் சரண்) முதல்வராகவும் அரசியல் வாரிசாகவும் அறிவித்துவிடுகிறார். இதற்கு மோபிதேவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். பிறகு இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது?, சத்தியமூர்த்தி ஏன் ராமை முதல்வராக அறிவித்தார்? அவர்களுக்கு என்ன தொடர்பு என்பது ‘கேம் சேஞ்சர்’ கதை.
தமிழில் ‘ஜென்டில்மேன்', ‘முதல்வன்' என அரசியல் படங்களை இயக்கியிருந்த ஷங்கர், தெலுங்குக்காக உருவாக்கி இருக்கும் அரசியல் படம் இது என்பதால் மசாலாவின் காரம் தூக்கலாக இருக்கிறது. பார்த்துப் பழகிய துரோகம், வஞ்சகம், அரசியல் சதுரங்கப் போட்டியைச் சுற்றிதான் திரைக்கதை பின்னப்பட்டிருக்கிறது.