மென்பொருள் துறையில் பணிபுரியும் சக்திவேலுக்கு (ஸ்ரீகாந்த்) பெண் பார்க்கிறார்கள். மணப்பெண் தன்னைவிட அதிக ஊதியம் பெறும் வேலையில் இருக்க வேண்டும் என்பது அவன் நிபந்தனை. காரணம், பணம் மட்டுமே வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் என்பது அவன் கணக்கு, ஆனால், அமெரிக்காவில் பிறந்து, தமிழ்க் கலாச் சாரத்தின் மீது பற்றுகொண்டு குடும்பத் தலைவியாக மட்டும் இருக்க நினைக்கும் பெண் ஷிவானியை (சிந்தியா) தந்திரமாக அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். இந்த முரண்களின் ஜோடி, வாழ்க்கையை அடுத்தகட்டம் நோக்கி எப்படி நகர்த்தினார்கள் என்பது கதை.
எல்லா காலத்துக்கும் அவசியமான கருத்தை முன்வைக்கும் திரைக்கதை, முழுவதும் உரையாடல்களின் வழியாகப் பயணிக்கிறது. என்றபோதும், வீட்டுக்குள் நிகழும் காட்சிகள், வெளியிடங்களில் நிகழும் காட்சிகள் என மாறி மாறிக் கோர்த்துக் கொடுத்து சீரியல் தன்மையை வெகுவாகக் குறைத்திருக்கிறார் இதன் இயக்குநர் ஜி.சங்கர். குறிப்பாக வசனங்களைக் கச்சிதமாகவும் இயல்பாகவும் எழுதியிருக்கிறார்.