ஒரே கருத்தாக்கத்தில் எழுதப்பட்ட ஐந்து கதைகள், அந்த ஐந்து கதைகளிலும் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றோ இரண்டோ மற்ற கதைகளின் ஊடாக ஒரு காட்சியில் கடந்து செல்வது என ஏதாவது ஒரு தொடர்பைக் கதைகளுக்கு இடையில் உருவாக்குவதே ஆந்தாலாஜி கதை சொல்லும் உத்தி. இவ்வகை எல்லாக் காலத்திலும் ரசிக்கப்படுவதற்குப் பல கதைகளின் தொகுப்பும் ஒவ்வொரு கதையும் அழுத்தமாக அமைக்கப்படுவதும் காரணம் எனலாம். இந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் பிரிட்டோ ஜே.பி., முதல் கதையின் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஒரு ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்ற நான்கு கதைகளைச் சொல்வதுடன் தன்னுடைய சொந்தக் கதையை வாய்மொழியாக இத்தொகுப்பின் 6வது கதையாகச் சொல்லிச் செல்கிறார். அந்த டிக்கெட் பரிசோதகராக வருபவர் வேறு யாருமல்ல; இன்று கோடம்பாக்கத்தின் ஆபத்பாந்தவனாக வலம் வரும் ஆல் இன் ஆல் யோகிபாபுதான்! இதில் அவரது பெயர் நா.முத்துகுமார்!
கல்லூரி நண்பர்களைத் தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு வீட்டுக்கு அழைக்கிறார் லவ்லின். அப்போது, லவ்லினுடைய சக வகுப்புத் தோழன் அவள் கைகள் இரண்டையும் இருகப்பற்றிக்கொண்டு வாழ்த்து தெரிவிப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ளும் அவளது அம்மா, மகளின் நண்பர்கள் வீட்டில் இருக்கும்போதே லவ்லின் கன்னத்தில் ஓங்கி அறைந்து கண்டிக்கிறார். அதில் மனமுடையும் லவ்லின் பிறந்த நாள் அன்றே தனது துணிகளை எடுத்துக்கொண்டு தோழி வீட்டுக்கு ரயிலில் கிளம்புகிறாள். அந்த ரயில் டிக்கெட் பரிசோதகராக வரும் யோகிபாபு, லவ்லீனுக்கு ஒரு தேநீர் வாங்கிக்கொடுத்து அவருக்குத் தான் சந்தித்த 4 மனிதர்களின் கதைகளைச் சொல்கிறார். கதைகளைக் கேட்டு முடித்தபிறகு லவ்லின் கோபம் குறைந்து வீட்டுக்குத் திரும்பினாரா என்பது முடிவு. இதில் லவ்லினின் அம்மாவாக அவரது நிஜ அம்மாவான விஜி சந்திரசேகரே நடித்திருக்கிறார்.