கடந்த 2009இல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இலங்கையின் வடகிழக்குக் கடற்கரை ஊர்களில் ஒன்றான முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்தது. அதில் புலிகள் அமைப்பின் போராளிகளும் 70 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களும் இலங்கை ராணுவத்தின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதை பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல் 4 தனக்குக் கிடைத்த காட்சிகளின் வழியாக உறுதி செய்தது.
அதேபோல், அப்போரில் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை இலங்கை ராணுவம் உறுதி செய்தது. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த போராளிகள் பலரும் கொல்லப்பட்டதையும் இலங்கை மீதான போர்க் குற்றப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. ஆனால், மிக முக்கியமாகப் பிரபாகரனின் கடைக்குட்டி மகன், 12 வயதேயான பாலசந்திரன் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு, 5 முறை சுடப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களைத் துயரத்தில் ஆழ்த்தியது. அந்தப் படுகொலைச் சம்பவத்தைக் களமாக வைத்து வெளிவந்துள்ள படம்தான் ‘வீரத்தின் மகன்’.