ஊட்டி: ஊட்டியில் நடைபெறும் துணை வேந்தர்கள் மாநாட்டுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வருவதையொட்டி ஊட்டி, மசினகுடி பகுதியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு நாளையும் (25ம் தேதி), நாளை மறுநாளும் (26ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நடக்கிறது. சிறப்பு அழைப்பாளராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கலந்து கொள்கிறார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நாளை (25ம் தேதி) காலை 10.35க்கு விமானம் மூலம் கோவை வருகிறார்.
அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் 11.15 அளவில் ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். ஹெலிகாப்டர் தளத்தில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு மற்றும் உயரதிகாரிகள் வரவேற்கின்றனர். வரவேற்புக்கு பின்னர் துணை ஜனாதிபதி கார் மூலம் ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு வருகிறார். அங்கு நடக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மறுநாள் 26ம் தேதி காலை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மற்றும் தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடவுள்ளார்.
துணை ஜனாதிபதி வருகையையொட்டி ஊட்டியில் நேற்று ராணுவ ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஊட்டியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டால், டெல்லியில் இருந்து மைசூர் வந்து, அங்கிருந்து மசினகுடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்து பின்னர் ஊட்டி வரவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, நேற்று மசினகுடி பகுதியிலும் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து துணை ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாகனங்களும் சோதனைச்சாவடிகளில் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
The post துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி தன்கர் நாளை ஊட்டி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.