சென்னை: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்றும் யுஜிசி பிரதிநிதியுடன் வேந்தர் அமைத்துள்ள தேடுதல் குழுவை ஏற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது: “மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற முறையில் தமிழக ஆளுநர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை நியமித்துள்ளார். உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக விதிமுறைகள் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) விதிமுறைகளின் அடிப்படையில் அந்த தேடுதல் குழுவில் வேந்தரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக செனட் பிரதிநிதி மற்றும் யுஜிசி பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.