கள்ளக்குறிச்சி: சாத்தனூர் அணை திறப்பு காரணமாக தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சென்னையிருந்து, திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கான சாலைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் புயல் புதுச்சேரி மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயல் கரையைக் கடந்த நிலையில்,திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நேற்று நள்ளிரவு திறக்கப்பட்ட நிலையில் 1.70 லட்சம் கன அடி அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் பாய்ந்தது. இதனால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றங்கரையை ஒட்டிய சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து குடியிருப்புகளையும், விளைநிலப் பகுதிகளையும், சாலையையும் பாதித்துள்ளது.