ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் தோமலபெண்டாவில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (எஸ்எல்பிசி) கட்டுமான வேலை நடந்து வந்த சுரங்கப் பாதையின் கூரை சனிக்கிழமை காலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 முதல் 8 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து நாகர்கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைபவ் கைக்வாட் கூறுகையில், "ஸ்ரீசைலம் நீர்தேக்கத்துக்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையில் இன்று வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதன் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நீர் பாசனத் திட்டத்தை மேற்கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர். எங்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. மீட்புக்குழு வந்த பின்பு நிலைமை குறித்து தெரியவரும்" என்று தெரிவித்தார்.