ஹாமில்டன்: நெதர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து சென்றுள்ள நெதர்லாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஹாமில்டனில் இரண்டாவது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.
லதாம் சதம்: நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (6), வில் யங் (1), ராஸ் டெய்லர் (1) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய கேப்டன் டாம் லதாம் சதம் விளாசினார். டக் பிரேஸ்வெல் (41) ஓரளவு கைகொடுத்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்தது. லதாம் (140 ரன், 123 பந்து, 5 சிக்சர், 10 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். நெதர்லாந்து சார்பில் லோகன் வான் பீக் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பிரேஸ்வெல் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய நெதர்லாந்து அணிக்கு ஸ்டீபன் மைபர்க் (4), மேக்ஸ் ஓ’டவுடு (0) ஏமாற்றினர். விக்ரம்ஜித் சிங் (31), பாஸ் டி லீடே (37) ஆறுதல் தந்தனர். ஸ்காட் எட்வர்ட்ஸ் (6), கேப்டன் பீட்டர் சீலார் (9) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, நெதர்லாந்து அணி 34.1 ஓவரில் 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. நியூசிலாந்து சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 3 விக்கெட் கைப்பற்றினார்.