போபால்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் "இந்திய அரசுக்கு எதிராகப் போராடுதல்" என்ற கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், ராகுல் காந்தி தனது தேச விரோத கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், "ராகுல் காந்தி தனது தேச விரோத கருத்துக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசின் கொள்கைகள் குறித்து ஆட்சேபனைகளை எழுப்பலாம். ஆனால், நாட்டுக்கே எதிராக போராடுகிறோம் என கூறுவது தேச விரோதம். இத்தகைய கருத்துகளை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு ராகுல் காந்தி வந்த பிறகு, அக்கட்சி தனக்கென ஒரு தனி தேச விரோத அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த காலங்களிலும் கூட, ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தேச விரோத சக்திகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.