விருதுநகர்: இந்திய அளவில் சுகாதாரம், ஊட்டச்சத்து திட்டத்தில் முன்னேற்றம் அடைந்த மாவட்டமாக விருதுநகர் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஆயோக் சார்பில் ரூ.3 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதி ஆயோக் மூலம் நாடு முழுவதும் 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை முன்னேற்ற கடந்த 2018ல் ‘முன்னேற விழையும் மாவட்ட திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் இருந்து விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.
முன்னேற விழையும் மாவட்டங்களில் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 49 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த காரணிகளின் முன்னேற்றம் குறித்த விவரங்களை மாதந்தோறும் ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்’ என்ற ‘டாஸ்போர்டில்’ பதிவேற்றம் செய்து, அதன் அடிப்படையில் நிதி ஆயோக் மாதத்தின் இறுதியில் தரவரிசை வெளியிடுகிறது.
இதனடிப்படையில், விருதுநகர் மாவட்டம் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்தில் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதற்காக முன்னேற விழைகிற மாவட்டம் திட்டத்தின் கீழ், நிதி ஆயோக் விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.3 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆரம்ப சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துதல், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்துதல், ஊட்டச்சத்து குறைபாட்டை நேரடியாக களைதல் ஆகியவற்றிற்காக, மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் ‘‘விரு கேர்’’ என்ற மாவட்ட தாய், சேய் கண்காணிப்பு மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கர்ப்பிணி முதல் குழந்தை பிறந்து 5 வயது வரை அவர்களது உடல் நலத்தை செவிலியர்கள், மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருத்துவம் மற்றும் மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஏதேனும் குறைபாடுகள், உடல் நல தொந்தரவு இருந்தால் உடனடியாக அவர்களை அணுகி, தேவையான மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவது என சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
நிதி ஆயோக்கின் அனைத்து குறியீடுகளிலும் விருதுநகர் மாவட்டம் பெரும் முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக சமீபத்திய ஒன்றிய அமைச்சரின் வருகையின் போதும் பாராட்டப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு மாவட்டத்தில் மகப்பேறு தாய்மார் இறப்பு ஏதும் இல்லாத நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தில் வழிகாட்டும் முன்னோடியாக, விருதுநகர் மாவட்டம் திகழ்வதாக நிதி ஆயோக் பாராட்டியுள்ளது.
The post தேசிய அளவில் சுகாதாரம், ஊட்டச்சத்து திட்டத்தில் முன்னேற்றம் விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை: நிதி ஆயோக் அறிவிப்பு appeared first on Dinakaran.