சென்னை: அரசியலமைப்பு விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், அனைத்து அரசு விழாக்களிலும் தேசிய கீதத்துக்கான மரியாதையை மீட்டெடுப்பதற்குமான தனது உறுதிப்பாட்டில் ஆளுநர் உறுதியாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இன்று கூடிய தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை என குற்றம் சாட்டி ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இந்த விவகாரம் சர்ச்சை ஆகியுள்ள நிலையில், இது குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மொழி, கலாச்சாரம் மற்றும் மரபுகள் உட்பட தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தின் மீதான தனது மாறாத அன்பு, மரியாதை மற்றும் போற்றுதலை தமிழக ஆளுநர் மீண்டும் வலியுறுத்துகிறார்.