38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான பளுதூக்குதலில் தமிழக வீரர் என்.அஜித் தங்கப் பதக்கம் வென்றார். அவர், மொத்தம் 311 கிலோ எடையை (ஸ்நாட்ச் 140+ கிளீன் அன்ட் ஜெர்க் 171) தூக்கி முதலிடம் பிடித்தார். தேசிய விளையாட்டு போட்டியில் அஜித் தங்கப் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். அவர், குஜராத் மற்றும் கோவாவில் கடைசியாக நடைபெற்ற இரு தேசிய விளையாட்டு போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
நீச்சலில் ஆடவருக்கான 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் தாமஸ் ஜோஸ்வா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். 200 மீட்டர் பேக் ஸ்டிரோக் பிரிவில் நித்திக் நாதெல்லா வெள்ளிப் பதக்கமும், டைவிங்கில் 3 மீட்டர் ஸ்பிரிங் போர்டில் அபிஷேக் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.