புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தனித்தே எதிர்கொள்ளப் போவதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ளக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேஜ்ரிவால் தனித்துப் போட்டி என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தைக் கொண்டு தனித்து தேர்தலை எதிர்கொள்ளும். காங்கிரஸுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.