சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தாரர்களை அறிவுறுத்தினார். தமிழக முதல்வர் அவர்கள் எப்படி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த 505 சுமார் 385 வாக்குறுதிகளை நிறைவேற்றி சொன்னதை செய்கின்ற அரசாக இந்த அரசு இருக்கின்றது என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (23.1.2025) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி, எண்ணூரில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் நவீன சந்தையையும், ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டு வரும் தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தையும், இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டு வரும் மூலக்கொத்தளம் சமுதாய நலக்கூடத்தையும் மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் கட்டப்பட்டு வரும் கொண்டித்தோப்பு இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 700 புதிய குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தாரர்களை அறிவுறுத்தினார்.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலே அமைந்திருக்கின்ற இந்த அரசு வடசென்னை வளர்ச்சி திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி தங்கசாலையில் ரூபாய் 4,500 கோடியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் ரூபாய் 6,350 கோடி செலவில் 252 பணிகள் தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 2024 நவம்பர் மாதம் 4ஆம் தேதி வால்டாக்ஸ் சாலையில் பல்வேறு பணிகளை துவக்கி வைத்தார்கள். துவக்கப்பட்ட பிறகு வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எடுத்துக் கொண்ட பணிகளை வாரத்திற்கு மூன்று நாட்கள் களஆய்வினை மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இந்த வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் கட்டப்பட இருக்கின்ற 700 குடியிருப்புகளினுடைய பணிகளின் முன்னேற்றத்தை ஊடகத்தின் சார்ந்த நீங்களே பார்த்திருப்பீர்கள்.
புயல் வேகத்தில் இல்லை ஜெட் வேகத்தில் இந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த பணி முடிவுற்று பயனாளிகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பயனாளிகள் பயன்படுத்துகின்ற வகையில் இந்தப் பணிகள் அமையும். இன்று காலை முதல் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எடுத்துக் கொண்ட பணிகளான திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி, எண்ணூரில் 58 சிறு வணிகம் செய்வதற்குண்டான கடைகளும், 300 பேர் அமரக்கூடிய ஒரு சமுதாய கூட பணிகளும் பார்வையிட்டு வந்தோம். அதை தொடர்ந்து ஆர் கே நகர் தொகுதியில் அமையவிருக்கின்ற தண்டையார்பேட்டை பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளுடன் அலுவலகக் கட்டிடம், வணிக கட்டிடம், அதேபோல் பேருந்துகள் நிறுத்துகின்ற பஸ்பே என்று சொல்லப்படுகின்ற கட்டடங்கள் என ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையத்தை அமைக்கின்ற பணியையும் பார்வையிட்டு வந்திருக்கின்றோம்.
அதைத்தொடர்ந்து இராயபுரம் பகுதியிலே அமைய இருக்கின்ற திருமண மண்டபத்தையும், அதைத்தொடர்ந்து துறைமுகத்தில் அமையவிருக்கின்ற டயாலிசிஸ் சென்டர் பணிகளின் முன்னேற்றத்தை குறித்து ஆய்வு செய்து இருக்கின்றோம். இப்பொழுது ஐந்தாவது இடமாக வால்டாக்ஸ் சாலையில் 700 பயனாளிகளுக்கு பயன்படக்கூடிய குடியிருப்புகள் கட்டுகின்ற பணியை தற்போது பார்வையிட்டு இருக்கின்றோம். வடசென்னை வளர்ச்சி திட்டத்தை பொறுத்த அளவில் தமிழக முதல்வர் அவர்கள் எப்படி தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த 505 தேர்தல் அறிக்கையில் சுமார் 385 வாக்குறுதிகளை நிறைவேற்றி சொன்னதை செய்கின்ற அரசாக இந்த அரசு இருக்கின்றது.
The post தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த 505 வாக்குறுதிகளில் சுமார் 385 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது தமிழக அரசு: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.