சென்னை: “அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரட்டும்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், “அண்ணா சாலையில் எங்கு வரவேண்டும்?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் இடையிலான வார்த்தைப் போர் காரணமாக, எக்ஸ் பக்கத்தில் ‘Get out Modi’ ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் திமுகவினர்.
சென்னையில் மத்திய அரசைக் கண்டித்து கடந்த 18-ம் தேதி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் மோடி கடந்த முறை தமிழர்களின் உரிமைகளை எல்லாம் பறிக்க முயன்றபோது, தமிழக மக்கள் உங்களை ‘Go Back Modi’ என்று துரத்தி அடித்தனர். மீண்டும் அதை தமிழக மக்களிடம் முயற்சி செய்தால், இந்தமுறை ‘Go Back Modi’ கிடையாது. இந்தமுறை தமிழர்கள் ‘Getout Modi’ என்று துரத்துவார்கள்,” என்று பேசியிருந்தார்.