சென்னை: “தொகுதி மறுசீரமைப்பின் விளைவாக, தமிழகத்தில் இருக்கக் கூடிய 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு எதிராக அதிமுகவும் நிச்சயமாக குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இன்றைக்கு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விளக்கங்களை இந்தத் துறையின் அதிகாரிகள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறோம். தமிழகம் இன்றைக்கு மிகப் பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, வருகிற மார்ச் 5-ம் தேதி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.