புதுடெல்லி: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு திமுக நேரில் அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்த ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் வரும் 22-ம் தேதி நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. தொகுதி மறுவரையறையில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் என திமுக கூறி வருகிறது.