சென்னை: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து 7 மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
2026-ம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்தும், ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள மார்ச் 22-ம் தேதி அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக, பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.