புவனேஸ்வர்(ஒடிசா): நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பிஜு ஜனதா தள கட்சித் தலைவரும் ஒடிசா முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் பங்கேற்க உறுதி அளித்துள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆதரவு திரட்டுவதற்காக பிஜு ஜனதா தள கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை, தமிழக அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று (செவ்வாய்கிழமை) சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்க நவீன் பட்நாயக்குக்கு முதல்வர் மு.க. ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தை அளித்தனர்.