*பொதுமக்கள் ஏமாற்றம்
செய்துங்கநல்லூர் : கல்லிடைக்குறிச்சி- திருச்செந்தூர் தொழில் வழித்தட சாலை பணி திட்டத்தில் மக்கள் அதிகளவில் கூடும் செய்துங்கநல்லூரில் புதிதாக பேருந்து நிறுத்தம், கழிவறைகள் கட்டப்படாது என்று தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.நெல்லை – திருச்செந்தூர் சாலையில் வளர்ந்து வரும் நகரம், செய்துங்கநல்லூர்.
மக்கள் தொகை அதிகம் கொண்ட இப்பகுதியில் அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம், ஆன்மீக ஸ்தலங்கள், பள்ளிகள், தொழிற்பயிற்சி கல்லூரி உள்பட ஏராளமான அலுவலகங்கள் உள்ளன. நெல்லைக்கும், திருச்செந்தூருக்கும் இடையே தூத்துக்குடி மாவட்ட எல்லையில் முதல் கிராமமாகவும் விளங்குகிறது. இங்கு புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு 20க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள அரசு, தனியார் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் சுற்றுவட்டார மக்கள், பல்வேறு தேவைகளுக்காக செய்துங்கநல்லூர் வந்தே நெல்லை, வைகுண்டம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கின்றனர்.
செய்துங்கநல்லூர் வழியாக ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பஸ் கடந்து செல்கிறது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பொது கழிவறை வசதி கிடையாது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் கல்லிடைக்குறிச்சி -திருச்செந்தூர் தொழில் வழித்தட சாலை பணி திட்டத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் கழிவறை அமைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இதற்கேற்ப வாய்மொழியாக அதிகாரிகளும் உறுதியளித்து இருந்தனர். ஆனால் தற்போது தொழில் வழிச்சாலை திட்ட பணிகள் நிறைவடையும் நிலையில், இதுவரை புதிய பேருந்து நிறுத்தம், கழிவறை பணிகள் நடைபெறவில்லை.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் நெடுஞ்சாலை துறையில் கேள்வி எழுப்பியிருந்தார். செய்துங்கநல்லூரில் ஏற்கனவே இருந்த 2 பேருந்து நிறுத்தத்தை புதுப்பிக்க திட்டம் உள்ளதா. இங்கே கழிவறை அமைக்க திட்டம் உள்ளதா. செய்துங்கநல்லூரில் வாறுகால் அமைக்கும் பணி முழுவதும் முடிந்து விட்டதா. என வினவிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டம் பொது தகவல் அலுவலர் கோட்டப்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் பதிலளித்து உள்ளார். அதில், செய்துங்கநல்லூர் கிராமப்பகுதியில் வடிகால் அமைக்கும் பணி முழுவதும் முடிந்து விட்டது. பேருந்து நிறுத்தங்களை புதுப்பிக்கும் திட்டம் இல்லை. கழிவறை வசதி எதுவும் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், தொழில் வழித்தட திட்டத்தில் செய்துங்கநல்லூரில் 2 பேருந்து நிறுத்தங்களை புதுப்பிக்கப்படாதது, கழிவறை கட்டித் தரப்படாதது இப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
வாறுகால் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டதாக ஆர்டிஐல் தகவல் கிடைத்துள்ளது. ஆனால் செய்துங்கநல்லூர் சந்தை அருகில் வடிகாலுக்கு மூடிப்போடாமல் திறந்து கிடக்கிறது.இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. அதற்கு மூடி போட வேண்டும், என்றார்.
மக்களை திரட்டி போராட்டம்
பாமக மாநில துணை தலைவர் கசாலி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக செய்துங்கநல்லூர் பேருந்து நிறுத்த பகுதியில் கழிவறை கட்டித்தர வேண்டுமென போராடி வருகிறோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.கடந்த ஆட்சியில் இடம் தேர்வு செய்து கட்டித்தரப்படும் என்றனர். ஆனால் தற்போது தொழில் வழித்தட திட்டப்பணிகளில் சுகாதார வளாகம் கைவிடப்படுவதாக கூறுவது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த சாலையில் சிறுசிறு கிராமப்பகுதிகளில் கூட பேருந்து நிறுத்தம், கழிவறைகள் கட்டித்தரப்பட்டு உள்ளது. ஆனால் முக்கிய சந்திப்பான செய்துங்கநல்லூர் பஜாரில் இடங்கள் இருந்தும் பேருந்து நிறுத்தங்கள், கழிவறை கட்டப்படாது என்பது வேதனையளிக்கிறது. எங்கள் கோரிக்கை மீது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும், என்றார்.
The post தொழில் வழித்தட சாலை பணி திட்டத்தில் செய்துங்கநல்லூரில் புதிய பேருந்து நிறுத்தம், கழிவறைகள் இல்லை என ஆர்டிஐ-ல் தகவல் appeared first on Dinakaran.