உலக மக்கள்தொகையில் 57.8% பேர் நகரப் பகுதியில் வசிப்பதாகவும் இந்த எண்ணிக்கை 2050ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாகும் என்றும் ‘யூத் கிளைமேட் சேஞ்ச்மேக்கர்ஸ்’ (Youth Climate Changemakers) அமைப்பு கணித்துள்ளது. இந்த நிலையில், நகரப் பகுதிகளில் தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள்தொகைப் பெருக்கத்தினால் பல்வேறு சவால்கள் உருவாகிவருகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்தால் வாழ்வதற்கான தகுதியைப் பெரும்பாலான நகரப் பகுதிகள் இழக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகரிக்கும் நகரமயமாக்கல்: காலநிலை மாற்றத்தினால் நகரங்கள் முன்னெப்போதும் இல்லாத கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன என ஐக்கிய நாடுகள் அவை சுட்டிக்காட்டியுள்ளது. உலகின் தெற்கு நாடுகளில் நகரமயமாக்கல் தீவிரமாகிவருகிறது. அதேநேரத்தில், அந்நாடுகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், வளங்கள் பற்றாக்குறையினாலும் அங்குள்ள நகரங்கள் நெருக்கடிகளைக் கடுமையாக எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, நகரங்களில் நிலவும் இடப்பற்றாக்குறை முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ளது.