திருவள்ளூர்: ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு, 25 வேப்பம்பட்டு, 26 வேப்பம்பட்டு, நத்தம்பேடு ஆகிய 4 ஊராட்சிகளை இணைத்து புதிதாக வேப்பம்பட்டு நகராட்சியாக உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருமாள்பட்டு, 25 வேப்பம்பட்டு, 26 வேப்பம்பட்டு, நத்தம்பேடு, ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்கள் ஊராட்சிகளை நகராட்சியாக மாற்றினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 500 முதல் 800 தினக்கூலி தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஊராட்சியில் தினக்கூலி தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். மேலும் ஒன்றிய அரசு மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியும் முற்றிலும் பாதிக்கப்படும். ஒன்றிய, மாநில அரசுகள் மூலமாக ஏழை, எளியவர்களுக்கு தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவதும் நிறுத்தப்டும்.
அனைத்து வரியினங்களும் உயர்த்தப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். தற்போது அரசாணையில் 80 சதவீதம் நகர்ப்புறம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் குடியிருப்பு 20 சதவீதம்தான் உள்ளது. 80 சதவீதம் காலியாகவே உள்ளது. சாதாரண ஊராட்சிகளாக உள்ள 4 ஊராட்சிகளையும் தனித்தனியாக முதல்நிலை ஊராட்சிகளாக தரம் உயர்த்தினாலே நிதி ஆதாரம் பெருகி ஊராட்சிகள் முன்னேறும். எனவே எங்களது ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்காமல் ஊராட்சியாகளாகவே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கோரிக்கை மனுவை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
The post நகராட்சி இணைப்புக்கு எதிர்ப்பு: 4 ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை appeared first on Dinakaran.