நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு படிப்படியாக தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கி, 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வகையில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ப இதுவரை 19 மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார்.
வழக்கமான அரசியல் கட்சிகளைப்போல் இல்லாமல் மாற்றுத்திறனாளி ஒருவரையும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் மாவட்டச் செயலாளர்களாக நியமித்திருப்பது அவரது புதுமையான சிந்தனையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. அவரது முயற்சிக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. அப்புனு என்ற மாற்றுத்திறனாளியை தென்சென்னை மாவட்டச் செயலாளராகவும், பாபு என்ற ஆட்டோ ஓட்டுநரை கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் விஜய் நியமித்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.