*கோவில்பட்டி அருகே பரபரப்பு
கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே நடுரோட்டில் ஹாயாக படுத்துக் கொண்டு செல்போன் பார்த்த போதை ஆசாமியால், அப்பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரையன்.
இவர், நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டிக்கு சென்று விட்டு ஊருக்கு அரசு பஸ்சில் சென்றார். மது போதையில் இருந்த அவர், ஊருக்கு செல்லாமல் கரிசல்குளத்தில் இறங்கினார்.
மேலும் நடுரோட்டில் ஹாயாக படுத்துக் கொண்டு செல்போனை பார்த்து கொண்டிருந்தார். இதனால் அந்த வழியாகச் செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சில வாகன ஓட்டிகள் அவரிடம் நடுரோட்டில் படுத்துக் கொண்டு ஏன்? அலப்பறை செய்கிறாய் எனக்கேட்டனர். அதற்கு அவர், சும்மா டென்ஷன், அதனால் ரோட்டில் படுத்து இருக்கிறேன் என கூறினார்.
ஒரு சிலர் அவரிடம், ரோட்டில் படுத்தால் ஏதாவது வாகனம் மேலே ஏறிவிட போகிறது என கூறினர். அதற்கு அவர், என் மேலே வாகனத்தை ஏத்த யாருக்கு தைரியம் உள்ளது என தெரிவித்ததோடு காலையில் பேசுவோம் என கூறினார்.
இதனைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் வீரையனை அங்கிருந்த பேருந்து நிறுத்தில் அமர வைத்து விட்டு சென்றனர். மதுபோதையில் அவர், செய்த ரகளையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இக்காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post நடுரோட்டில் ஹாயாக படுத்துக் கொண்டு செல்போன் பார்த்த ‘போதை ஆசாமி’ appeared first on Dinakaran.