மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே எட்டிமங்கலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (35). இவருக்கு சந்தியா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். துபாயில் வேலை பார்த்து வந்த இவர், சமீபத்தில் குடும்பத்தினரை பார்க்க சொந்த ஊர் வந்திருந்தார். மீண்டும் வேலைக்கு செல்வதற்காக நேற்று மதுரையில் இருந்து, காலை 9 மணிக்கு துபாய் புறப்பட்ட விமானத்தில் பயணித்தார்.
விமானம் நடுவானில் பறந்த போது, பிரகாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதுகுறித்து பைலட்கள், அடுத்து வந்த கேரள மாநிலம் கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு கிடைத்த அனுமதியை ெதாடர்ந்து, விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அங்கு காத்திருந்த ஆம்புலன்சில் பிரகாஷ் ஏற்றப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார், எட்டிமங்கலத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதைக்கேட்டு கதறி அழுத அவர்கள், அவரது உடலை பெறுவதற்காக, கொச்சிக்கு விரைந்துள்ளனர்.
The post நடுவானில் பறந்த துபாய் விமானத்தில் மதுரை வாலிபர் பலி appeared first on Dinakaran.