சென்னை: இயக்குநர் விக்னெஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரௌடி தான்’ திரைப்படத்தை நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தின் படப்பிடிப்பின்போதே நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நயன்தாரா திருமண ஆவணப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதில் நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உரையாடும் சில காட்சிகள் பயன்படுத்தப்பட்டது.
இதனையடுத்து நயன்தாரா தனது திருமண ஆவணப்படத்தில், ‘நானும் ரௌடி தான்’ படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த போது, நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு(இன்றைக்கு) நீதிபதி தள்ளிவைத்த வைத்தார்.
இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது “சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது காஞ்சிபுரத்திலோ மும்பையிலோதான் தொடர முடியும். காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது; மூன்றாவது நபர் எடுத்த காட்சிகள் அவை. தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என நெட்பிளிக்ஸ் தரப்பு வாதிட்டது.
பின்னர் “காட்சிகள் அனைத்தும் தனது படப்பிடிப்பு தளத்தில்தான் எடுக்கப்பட்டது. படத்தின் அத்தனைக் காட்சிகளும் தனக்குச் சொந்தமானவை. பட ஒப்பந்தம் கையெழுத்தான போது சென்னையில்தான் அலுவலகம் இருந்தது, எனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். ஆடை, சிகை அலங்காரம் முதல் அனைத்தும் கம்பெனிக்கு சொந்தம் என தெரிந்தே பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் நயன்தாரா” என தனுஷ் தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களைத் தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
The post நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.