நாகர்கோவில்: நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3 வது ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி இடையிலான 86 கி.மீ. ரயில் பாதையில் 57 கி.மீ. தமிழகத்திலும், 29 கி.மீ. கேரளாவிலும் உள்ளது. இந்த பாதையில் தற்போது கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள பகுதிகள் இரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு விட்டது. நாகர்கோவில் முதல் இரணியல் வரை உள்ள பாதை இரு வழிபாதையாக மாற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதே போல் கேரளா பகுதியில் திருவனந்தபுரம் முதல் நேமம் வரை இருவழி பாதை பணிகள் வேகமாக நடந்து வருகின்றது. குழித்துறை மற்றும் பாறசாலை ரயில் நிலையங்களுக்கு இடையே நான்கு குகைகள் இடித்து மாற்றம் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் இன்னும் 2 மாதத்தில் தொடங்க இருக்கிறது. தற்போது நிலுவையில் உள்ள கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணிகளை வேகமாக முடிக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் வரை உள்ள 71 கி.மீ தூரத்தில் மூன்றாவது இருப்பு பாதை அமைக்கும் திட்டத்திற்கு இறுதி கட்ட இட ஆய்வுக்கு, ரயில்வே துறை அனுமதி அறிவித்துள்ளது. இந்த இறுதிக்கட்ட ஆய்வுக்காக ஒரு கி.மீ க்கு இரண்டு லட்சம் வீதம் மொத்தம் ரூ. 1.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இந்த ஆய்வுக்காக இன்னும் சில மாதங்களில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. இவ்வாறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பின்னர் தனியார் நிறுவனம் சார்பாக இந்த ஆய்வு நடத்தப்படும் என தெரிகிறது.
இந்த ஆய்வுகள் தெற்கு ரயில்வேக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின் தெற்கு ரயில்வே சார்பாக ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆய்வில் போக்குவரத்து, தொடக்க நிலை பொறியியல் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துதல், முழுமையான திட்ட அறிக்கை தயாரித்தல், ரேட் ஆப் ரிட்டன் கணக்கீடு செய்தல் ஆகிய அம்சங்கள் உட்படுத்தி இருக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு வைக்கப்படும் ஆய்வின் அடிப்படையில் இந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி தேவைப்படும், எவ்வளவு ரேட் ஆப் ரிட்டன் கிடைக்கும். எந்தெந்த பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று அனைத்து வகையான தகவல்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும். இந்த அறிக்கையை ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பின்னர் நிதி அயோக்கின் திட்ட மதிப்பீடு, மேலாண்மை பிரிவு ஒப்புதல், பிரதமர் தலைமையிலான பொருளாதார தொடர்பான அமைச்சரவை குழு ஒப்புதல் ஆகியவை நிறைவு பெற்ற பின், இந்த திட்ட பணிக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.
தற்போது இருவழிபாதை நடந்து வரும் நிலையில் 3வது பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து குமரி மாவட்ட ரயில் ஆர்வலர்களிடம் கேட்ட போது, கடந்த வாரம் பிரதமர் மோடி கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகம் திறந்து வைத்தார். இந்த துறைமுகம் திறக்கப்பட்டதால் இந்த தடத்தில் சரக்கு போக்குவரத்து அதிகமாக வர இருக்கிறது. கேரளாவில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. தமிழ்நாட்டில் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் இந்த துறைமுகம் கேரளாவில் இருந்தாலும் சரக்கு போக்குவரத்துக்கு தமிழ்நாடு தொழிற்சாலைகள் நம்பியே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு திருவனந்தபுரம் – நாகர்கோவில் பாதை வழியாக தான் வர வேண்டும். இந்த நிலையில் தான் மூன்றாவது இருப்பு பாதைக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது என்றனர்.
தற்போது திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயில் பாதையில் அதிக இட நெருக்கடியுடன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையில் இனி சரக்கு ரயில்கள் இயக்கும் போது இடநெருக்கடி இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த பகுதியில் மூன்றாவது பாதை அமைக்கும் தேவையும் உள்ளது. இந்த மூன்றாவது பாதை அமைக்கப்பட்டால் இரண்டு பாதைகளில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். மற்றொரு பாதையில் முழுவதும் சரக்கு பாதையில் இயங்கும். இவ்வாறு சரக்கு பாதையாக இயங்குவதால் பயணிகள் ரயில்கள் இயக்குவதற்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்க வாய்ப்பு இல்லை என்பதும் ரயில் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
நிலம் தேவை?
இந்த திட்டத்துக்கு மொத்தம் 567 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாக கூறுகிறார்கள். இரு பகுதிக்கும் இடையே பெரிய ஆற்று பாலங்கள் – 3, பெரிய பாலங்கள் – 16, சிறிய பாலங்கள் – 405, மேம்பாலங்கள் – 29, கீழ் பாலங்கள் – 12, பெரிய குகைகள் – 2, அதி கூர்மையான வளைவுகள் -4, ஆள் உள்ள ரயில்வே கிராசிங் கேட் – 39, வாகனம் செல்லும் மேம்பாலங்கள்- 29, பயணிகள் செல்லும் மேம்பாலங்கள்- 11, தண்ணீர் செல்லும் மேம்பாலங்கள்- 15
மொத்த ரயில் நிலையங்கள்
நேமம், பாலராமபுரம், நெய்யாற்றின்கரை, தனுவச்சபுரம், அமரவிளை, பாறசாலை, குழித்துறை மேற்கு, குழித்துறை, பள்ளியாடி, இரணியல், வீராணிஆளுர், நாகர்கோவில் டவுண், நாகர்கோவில் சந்திப்பு.
The post நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை அமைக்க திட்டம்: விரைவில் ஆய்வு தொடக்கம் appeared first on Dinakaran.