நாகப்பட்டினம்: தமிழ்நாட்டின் நாகை – இலங்கையின் காங்கேசன் துறை இடையே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. வாரம் 5 நாட்கள் இரு மார்க்கமும் சென்று வந்த கப்பல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பாதுகாப்பு கருதி அப்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது வடகிழக்கு பருவமழை விலகிய நிலையில் இம்மாதம் 12-ம் தேதி முதல் கப்பல் சேவை தொடங்கும் என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் குறிப்பிட்ட தேதியில் கப்பலை இயக்க முடியவில்லை. பின்னர் அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதால் இன்று காலை சிவகங்கை கப்பல் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது.