நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த வாரத்தில் நாகை துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கரை திரும்பின.
தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களை வாங்குவதற்கு மீன் பிரியர்கள், வியாபாரிகள் ஆயிரக்கணக்கானோர் நாகை துறைமுகத்தில் அதிகாலையிலேயே திரண்டனர். ஆனால், கடல் காற்று அதிகம் வீசுவதன் காரணமாக பெரிய ரக மீன்கள் கடலின் ஆழத்துக்குச் சென்றுவிட்டதால், போதுமான மீன்கள் கிடைக்கவில்லை எனவும், செலவு செய்த பணத்துக்கு ஈடாக நஷ்டம் இல்லாத அளவுக்கு மீன்கள் கிடைத்ததாக வும் கடலுக்குச் சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.