திருநெல்வேலி: ‘நெல்லையில் கல்லூரி மாணவர் சினனத்துரை தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின் பேரில் கொக்கிரகுளம் அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள், சின்னத்துரையிடம் பணம் கேட்டதாகவும், பணம் இல்லாததால், அவரை கட்டையால் அடித்து வலதுகையில் காயம் ஏற்படுத்திவிட்டு, அவரது அலைப்பேசியை பறித்து சென்றனர்’ என்று நெல்லை மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சின்னத்துரை (18), திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது தாய், தந்தை மற்றும் தங்கையுடன் வசித்து வருகின்றனர். சின்னத்துரை தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வணிகவியல் நிறுவன செயலாளர் (B.Com. – Corporate Secretaryship) துறையில் படித்து வருகிறார். நேற்று (ஏப்.16) மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து சென்றுள்ளார்.