
புதுச்சேரி: “நம் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். நமக்கு பழமையான வரலாறு உண்டு. வெளிநாட்டவர் தங்களது சரித்திரத்தை பாதுகாக்கின்றனர். நாம் சரித்திரத்தை பாதுகாக்கவில்லை” என்று திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் பெப்சி தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் புதுச்சேரி மாநிலக் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் நாடக தந்தை தவத்திரு சங்கர்தாஸ் சுவாமிகள் 103-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்சி தலைவரான இயக்குநர் ஆர்,கே.செல்வமணி பேசியது: “தெருக்கூத்தும், நாடகமும் திரைப்படங்களுக்கு முன்னோடி வடிவம். இதில் உள்ளோர் திரைத்துறையினருக்கு ரத்த உறவு.

