நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு 6 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் வரும் 2026-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க, கடந்த மார்ச் 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டினார். இதில் 58 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ‘தொகுதி மறுவரையறையில் தென் மாநில பிரதிநிதித்துவம் குறைக்கப்பட கூடாது. இதுதொடர்பான கோரிக்கைகள், போராட்டங்களை முன்னெடுக்கவும், மக்களிடம் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும்’ என்று இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கட்சி தலைவர்களுக்கு முறையான அழைப்பை அனுப்பவும் முடிவு செய்யப்பட்டது.