சென்னை: தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைவது, மாநில உரிமைக் குரலை நசுக்குவதாக அமைந்துவிடும். எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத் தொகுதி மறு வரையறை மேற்கொள்ளும்போது, விகிதாச்சார அடிப்படையில் சம பங்கு அளிக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு – மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., மற்றும் பொருளாளர் மு.செந்திலதிபன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் வைகோ பேசியது: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 81-ன்படி மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் இடங்கள் அம்மாநிலத்தின் மக்கள் தொகையை வைத்து முடிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அம் மாநிலத்தின் மக்கள் தொகை விகிதாசாரத்தின் அளவு சமமாக இருக்க வேண்டும்.