ராணிப்பேட்டை: லட்சக்கணக்கான மகளிரின் வாழ்க்கை தரத்தை திராவிட மாடல் அரசு உயர்த்தி உள்ளது. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிைம திட்டம் என ராணிப்பேட்டையில் ரூ37.79 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ராணிப்பேட்டையில் பல்வேறு துறைகளின் சார்பில் 7,165 பயனாளிகளுக்கு ரூ37.79 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 700 பயனாளிகளுக்கு ரூ8.12 கோடி இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், கூட்டுறவுத் துறை சார்பில் 716 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ7.43 கோடி கடனுதவி காசோலைகள், 230 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், 364 விளையாட்டு உபகரணங்கள் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு, சேதங்கள் தடுக்கப்பட்டன. அதனால் தான் இந்த விழா மிக சிறப்பாக, மகிழ்ச்சியாக நடைபெறுகிறது. கடந்த வாரம் தமிழ்நாட்டுக்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டை ஊக்குவிக்கின்ற சிறந்த மாநிலம் தமிழ்நாடு என விருது வழங்கப்பட்டுள்ளது. சென்ற வருடமும் இந்த விருது கிடைத்தது. கல்வியை முன்னிறுத்தி செயல்படுவது தான் திராவிட மாடல் அரசு. பிள்ளைகளுக்கு காலை உணவு கொடுத்து பள்ளிக்கு அனுப்புவதும், திராவிட மாடல் அரசு, புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக கல்வி ஊக்கத்தொகை வழங்குவது திராவிட மாடல் அரசு. யார், யாருக்கு என்ன தேவைகள் என அறிந்து முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டு மகளிர் பொருளாதாரத்திற்கு வேறு யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என உருவாக்கப்பட்டது தான் மகளிர் சுய உதவி குழுக்கள். மகளிரை மரியாதையுடன், தலைநிமிர்ந்து சுயமரியாதை உடன் வாழ செய்துள்ளது தமிழ்நாட்டு மண். திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் மகளிர் குழுக்களுக்கு ரூ92 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு அரணாக பாதுகாப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் போட்ட கையெழுத்து மகளிர் விடியல் பயணம். இந்த மூன்றரை ஆண்டுகளில் விடியல் பயணம் திட்டம் மூலமாக 580 கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு மகளிரும் இந்த திட்டத்தின் மூலம் ஆயிரம் வரை மாதந்தோறும் சேமித்து வருகின்றனர். இந்தியாவையே திரும்பி பார்க்கும் வகையில் மற்றொரு திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ரூ1000 பெற்று வருகின்றனர். இப்படி மகளிர் வளர்ந்தால் மாநிலம் உயரும் என்று தான் நமது முதலமைச்சர் இந்த திட்டங்களை எல்லாம் வழங்கி வருகிறார். இந்த மேடையில் சுய உதவி குழுக்களுக்கு கடன் இணைப்பு வழங்கப்பட்டது. இதை முதலமைச்சர் மகளிருக்கு கொடுக்கக்கூடிய கடனாக பார்க்கவில்லை. மகளிரின் உழைப்பின் மீது நம்பிக்கை தொகையாக தான் பார்க்கிறார். மகளிரின் வெற்றியே அரசின் லட்சியம். எப்போதும் மக்களோடு மக்களாக கைகோர்த்து நிற்கின்ற அரசு. எப்போதுமே நமது முதலமைச்சர் உங்களது குடும்பத்தில் ஒருவராக என்றும் துணை நிற்பார். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பது தான் திராவிட மாடல் அரசு. இவ்வாறு பேசினார்.
The post நாட்டையே திரும்பி பார்க்க வைத்த கலைஞர் உரிமை தொகை திட்டம் மகளிரின் வெற்றியே அரசின் லட்சியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.