கோவை: நான் யாரையும் கைகாட்டவில்லை. பாஜ மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜ தேசிய தலைமை விரும்புகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.
கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை பாஜ மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என அவர் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பாஜ மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில் வருமாறு:
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மாற்றம் என பேசப்படுகிறதே? இதெல்லாம் முக்கியமா? கோவையில் ஏற்கனவே நான் டெல்லிக்கு சென்று திரும்பியபோது அளித்த பேட்டியில் கூறியிருக்கிறேன். 2026 தேர்தலை எப்படி அணுகப்போகிறோம் என்பதையும் வெளிப்படையாக ெசால்லியிருக்கிறோம். இதற்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை. புதிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கும். அதை நீங்கள் பாருங்கள். அதற்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் விரிவாக பேசுகிறேன்.
புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நீங்கள் இருக்கிறீர்களா? புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அண்ணாமலை டெல்லிக்கு போனார். அண்ணாமலை இவரை கை காட்டினார். அண்ணாமலை இவரை கைகாட்டவில்லை என எந்த வம்பு சண்டைக்கும் நான் வரவில்லை. நான் போட்டியில் இல்லை. அதிமுக-பாஜ கூட்டணி வேண்டும் என்றால் மாநில தலைமையை மாற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?
நான் அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. என்னை பொருத்தவரை இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும். நல்லவர்கள், நல்ல ஆத்மாக்கள் இருக்கும் கட்சி. இந்த கட்சியில் பலர் உயிரை கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள். இந்த கட்சி எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்போது நிறைய பேசுவோம். புதிய தலைவர் பதவியில் போட்டியில் இல்லை என்கிறீர்களே என்ன காரணம்?
இங்கு தலைவர்கள் யாரும் போட்டிபோடுவதில்லை. பாஜவில் தலைவர்களுக்கு போட்டியெல்லாம் கிடையாது. எல்லோரும் சேர்ந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுப்போம். மற்ற கட்சிபோல 50 பேர் தலைவர் பதவிக்கு நாமினேசன் கொடுத்து, ஓட்டெடுப்பு நடத்தி அப்படியெல்லாம் கிடையாது. எல்லாரும் சேர்ந்து ஏகமனதோடு, ஒருமனதோடு தலைவரை தேர்ந்தெடுப்போம். மாநில தலைவராக இல்லாவிட்டால் என்ன பண்ணப்போறீங்க? ஏன் தலைவா, நீங்க மரியாதை கொடுக்கமாட்டீங்களா? அதற்குள் மறந்து விடுவீங்களா? ஒரு விவசாயியின் பையனை மறந்து விடுவீங்களா? என்னுடைய பணி ஒரு தொண்டனாக தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
* இஸ்லாமியர்களுக்கு வரப்பிரசாதம் வக்பு மசோதா
வக்பு திருத்த மசோதா குறித்து எழுப்பி கேள்விக்கு, ‘‘பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியுடன் நிறைய கட்சிகள் ஆதரவுடன் ஜனநாயக முறையில் வக்பு திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளதை தமிழ்நாடு பாஜ வரவேற்கிறது. இது ஏழை இஸ்லாமிய சொந்தங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். 1913 முதல் வக்பு சட்டத்தில் மாற்றங்கள் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்டுள்ளன.
1913 முதல் 2013ம் ஆண்டு வரை வக்பு வாரியத்தின் சொத்து 18 லட்சம் ஏக்கராக இருந்தது. 2013 முதல் 2025 வரை புதிதாக 21 லட்சம் ஏக்கர் சேர்ந்துள்ளது. தற்போது வக்பு வாரியத்திடம் 39 லட்சம் ஏக்கர் சொத்து உள்ளது. நாட்டில் ரயில்வே, வக்பு வாரியத்திடம்தான் அதிக சொத்துகள் உள்ளது. அதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு கொடுத்துள்ளோம்’ என்று அண்ணாமலை கூறினார்.
* அமைச்சர் பதவியா?
‘‘விரைவில் ஒன்றிய அமைச்சராக பார்க்கலாமா?’’ என்று அண்ணாமலையிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘இந்த மண்ணைவிட்டு எங்கேயும் போகமாட்டேன். ஏன் பேக் செய்து அனுப்புவதிலேயே இருக்கிறீங்க. டெல்லிக்கு போனா ஒரு நைட் வேலையை முடித்துவிட்டு அடுத்தநாள் திரும்புபவன் நான். அதனால் கவலைப்படாதீர்கள். இங்குதான் உங்கள் முன்பு சுற்றிக்கொண்டு இருப்பேன்’’ என்றார்.
The post நான் யாரையும் கைகாட்டவில்லை பாஜ மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை விரக்தி பேட்டி appeared first on Dinakaran.