சென்னை: நாராயணசாமி நாயுடு பிறந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “உழவர்களுக்காக உயிரையே தந்து உழைத்த நாராயணசாமி நாயுடுவின் தியாகத்தை போற்றுகிறேன். 1925-ல் பிறந்த நாராயணசாமி நாயுடு, 1984-ல் மறையும் வரை வாழ்க்கையை உள்ளவர்களுக்காகவே அர்ப்பணித்தவர். நாராயணசாமி நாயுடுவின் முயற்சி காரணமாக பல்வேறு மாநிலங்களில் உழவர் சங்கங்கள் உருவானது” என நாராயணசாமி நாயுடு நூற்றாண்டையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “உழவர் பெருமக்களுக்காகத் தனது உயிரையே தந்து உழைத்த உத்தமராம் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்களின் நூற்றாண்டில் அவரது தியாகத்தைப் போற்றுகிறேன்.
1925-ஆம் ஆண்டு பிறந்த நாராயணசாமி நாயுடு அவர்கள். 1984-ஆம் ஆண்டு தான் மறையும் வரையிலும், தனது வாழ்க்கையை உழவர் மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தகையாளர். உழவர்களது உரிமைக்குப் போராடும் சமூக விவசாயியாக வலம் வந்த அவர், உழவர் பெருமக்கள் தனித்தனியாக இருப்பதை விட அமைப்பாகச் சேர்ந்து கோரிக்கை வைத்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும் என்பதற்காக உழவர் அமைப்பைத் தொடங்கினார்.
1968-ஆம் ஆண்டில் கோவை வட்ட உழவர் இயக்கம் தொடங்கிய அவர், பின்னர் அதை கோவை மாவட்ட இயக்கமாக மாற்றி, 1970-ஆம் ஆண்டு தமிழக உழவர் இயக்கமாக அதனை விரிவுபடுத்தினார்கள். அதன்பிறகு பதினைந்து ஆண்டுகள் உழவர் உரிமைக்காகப் போராடியும், வாதாடியும் அதன் மூலமாக வெற்றி பெற்றும் காட்டினார்.
1980-ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலும் உழவர் அமைப்பை ஒன்று சேர்த்து உருவாக்க அவர் எடுத்த முயற்சிகளின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் உழவர் சங்கங்கள் உருவானது. 1982-ஆம் ஆண்டு இந்திய உழவர் மற்றும் உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார்.
உழவர்களுக்கு மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று நாராயணசாமி நாயுடு அவர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் போராட்டம் நடத்தினார். பின்னர். 1989-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இல்லை என்று அறிவித்து நாராயணசாமி அய்யாவின் கனவை நிறைவேற்றிக் காட்டினார்.
மேலும், வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ள உழவர்களின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது அவர் எழுப்பிய கோரிக்கையாகும். அந்த வகையில், தலைவர் கலைஞர் ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது அவரது கனவை நனவாக்கிய செயலாகும்.
உழவர் நலனே தனது வாழ்வு என வாழ்ந்த நாராயணசாமி நாயுடு அவர்கள், 21.12.1984 அன்று கோவில்பட்டியில் உழவர்களிடையே உரையாற்றிவிட்டு ஓய்வெடுத்தபோது, படுக்கையிலேயே மரணம் அடைந்தார்.
தனது வாழ்வின் இறுதிநாள் வரையிலும் உழவர்கள் மற்றும் உழைப்பாளர்களின் உரிமைக்காக உழைத்த நாராயணசாமி நாயுடு அவர்களின் நூற்றாண்டில், அவரது பெருவாழ்வைப் போற்றும் வகையில், துடியலூர் கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி இரயில்வே மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்பதையும். அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.
அய்யா நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவைப் போற்றுவோம்! அவரது கனவுகளை நிறைவேற்றுவோம்! ” என தெரிவித்துள்ளார்.
The post நாராயணசாமி நாயுடு பிறந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.