புதுக்கோட்டை : அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவரும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளருமான காளிதாஸ் மற்றும் பேராசிரியர்கள் சாலை கலையரசன், மணிவண்ணன் ஆகியோர் நார்த்தாமலை அருகே உள்ள ஊரப்பட்டி கிராமத்தின் பீமாண்டகுளம் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால வகையைச் சேர்ந்த சதுர மற்றும் செவ்வக வடிவ கல்திட்டை, கல் வட்டங்கள், கற்குவியல் நெடுங்கல் போன்ற ஈம சின்னங்களை கண்டறிந்தனர். இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது:
இந்த கல்திட்டைகள் பெருங்கற்கால பண்பாட்டை சார்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களின் ஒரு வகையாகும். இது பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும் அவற்றின் மீது சமநிலையில் தட்டையான ஒரு பலகை போன்ற ஒரு கல்லையும் வைத்திருக்கும் ஓர் அமைப்பாகும். பெருங்கற்கால மனிதர்களின் சுவடுகள் பெரும்பாலும் மலைகளை ஒட்டிய பகுதிகளிலும், மலைச்சரிவுகளிலுமே அதிகமாக காணப்படுகின்றன.
அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் வேட்டையின் போதோ வயது மூப்பின் காரணமாகவோ நோய்வாய்பட்டோ இறக்க நேரிட்டால் இறந்தவர்களின் உடலை புதைத்து அந்த இடத்தில் அவர்களின் நினைவாகவும், அடையாளத்துக்காகவும் காட்டு விலங்குகள் உடலை சிதைக்காமல் இருக்கவும் பெரிய, பெரிய கற்களை வைத்து இது போன்ற ஈமச்சின்னத்தை அமைத்தனர்.
இதற்கு கல்திட்டை என்று பெயர். தற்போது அமைக்கப்படும் சமாதிகளுக்கு இதுதான் தொடக்கம். இங்கு காணப்படும் பெருங்கற்காலச் சின்னங்கள் ஒரே இடத்தில் சதுர மற்றும் செவ்வக வடிவில் உள்ளன. இது அபூர்வமான அமைப்பாகும். இப்பெருங் கற்காலச் சின்னங்கள் செம்புராங் கற்களைக் கொண்டும், கடினமான கருங்கல்களைக் கொண்டும் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.இதிலிருந்து இங்கு வாழ்ந்த மக்களின் கட்டிட கலைத்திறனை அறிய முடிகிறது.
இதேபோல் 20க்கும் மேற்பட்ட கல்வட்டங்களும், கற்குவியல்களும் இங்கு காணப்படுகின்றன. தற்போது வனப்பகுதியாக இருந்தாலும் இந்த ஊர் மிகப் பழமையான ஊர் என்பதை கள ஆய்வில் அறியமுடிகிறது என்றனர்.இங்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்த்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
எனவே தமிழகத் தொல்லியல் துறை உடனடியாக இந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்து வரும் நினைவுச் சின்னங்களை அடையாளப்படுத்தி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றனர்.
The post நார்த்தாமலை அருகே 2000 ஆண்டுக்கு முன் பயன்படுத்திய கல்திட்டை ஆய்வு appeared first on Dinakaran.